அடிப்படை பாதுகாப்பு தான் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி - உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம் 10000 சிசிடிவி கேமராக்களை சென்னையில் இலவசமாக சமூக மேம்பாடு மற்றும் குழந்தை பாதுகாப்பை மையப்படுத்தி பொருத்தப்பட உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன்,முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் நேற்று பேசுகையில், வெறும் தனிநபர்களாக மட்டும் நாம் இங்கு கூடவில்லை, நம்முடைய நகரத்தைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தவும், நீதியின் புனிதமான செயல்முறையை நிலைநிறுத்தவும் ஒரு கூட்டுப் பொறுப்பின் பாதுகாவலர்களாக நாம் கூடியுள்ளோம். பாதுகாப்பு என்பது நம் யோசனை அல்ல. நீதியின் கட்டிடம் நிற்கும் அடித்தளம் ஆகும்.
சட்டம் ஒழுங்கைப் பின்பற்றுவதன் மூலம் நாகரிகம் நிலைத்து நிற்கிறது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. இருப்பினும், ஒழுங்குமுறை இல்லாமல் சட்டம் முழுமையடையாது. சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொறுப்புடன் பயன்படுத்தப்படும்போது, அது வெறும் தடுப்பு கருவியாக மட்டுமல்லாமல், நீதியின் கலங்கரை விளக்கமாகவும் மாறுகிறது.
இப்போது நாம் தொடங்கி வைக்கும் இந்த முயற்சி நமது நகரத்தை விரிவான மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு வலையமைப்பால் மேம்படுத்துவது வெறும் தொழில்நுட்ப பாய்ச்சலாக இல்லாமல், இது ஒரு ஆழமான அடித்தளம் ஆகும் நமது மக்களின் பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது கிடையாது. இந்த நகரத்தில், எந்த அநீதியும் இதன் மூலம் கண்ணுக்குத் தெரியாமல் போகாது, எந்தத் தவறும் விசாரணையிலிருந்து தப்பிக்காது, எந்தப் பாதிக்கப்பட்டவரும் கேட்கப்படாமல் போகமாட்டார் என்பதற்கானது தான் இந்த அறிவிப்பு.
உண்மையைத் தேடுவதில் மிகவும் சத்தமாகப் பேசும் மௌன சாட்சியாக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன. இது ஊகங்களை ஆதாரமாக மாற்றுகிறவதுடன், நாடு முழுவதும் உள்ள நீதிமன்ற அறைகளில், இது நீதியின் போக்கை மாற்றியிருக்கிறது. குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தல், நிரபராதிகளை விடுவித்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கையை மீட்டெடுத்தல் போன்றவற்றில் சிசிடிவி பெரிதும் பயன்பட்டு வருகிறது.
எனினும் சிசிடிவி கேமராக்கள் ஒருபோதும் ஒடுக்குமுறையின் ஒரு கருவியாக மாற அனுமதிக்க கூடாது. அது ஒரு வலுவான சட்ட கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும். பாதுகாப்பும் சுதந்திரமும் எதிரெதிர் சக்திகள் கிடையாது. இரண்டுமே நீதியான அரசின் இரு தூண்கள் ஆகும். ஒன்றை மற்றொன்றின் இழப்பில் அடைவது என்பது நாம் நிலைநிறுத்த முயற்சிக்கும் இலட்சியங்களையே காட்டிக் கொடுப்பது போன்றது.
இன்றைக்கு பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரினை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும். ஒரு சமூகத்தின் உண்மையான வலிமை, அதன் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கும் திறனில் தான் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு எதிரான ஒவ்வொரு வன்முறைச் செயலும், ஒரு குழந்தைக்கு எதிரான ஒவ்வொரு துஷ்பிரயோகக் கூச்சலும், அப்பாவிகள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல அது நமது தேசத்தின் மனசாட்சிக்கே அவமானம் ஆகும்-
பெண்கள் பயமின்றி நடக்கக்கூடிய நகரமாக மாற்றுவதை அடிப்படை கடமையாக நிறைவேற்ற வேண்டும். இந்த முயற்சி பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை வளர்க்கும். கண்காணிப்பு என்பது தடுப்பு மட்டுமல்ல அது அதிகாரமளிப்பதும் ஆகும். வார்த்தைகள் தோல்வியடைந்து சாட்சியங்கள் தடுமாறிய இடங்களில், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் மீண்டும் மீண்டும் நீதியைக் கொண்டு வந்துள்ளன. இது பொய்களை அம்பலப்படுத்தியுள்ளது, உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது " என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறினார்.
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் பேசுகையில். இன்றும் நமது நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகிறது. தினந்தோறும் பல்வேறு ஊடகங்களில் இதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. பெண்கள் எப்பொழுது சுதந்திரமாக சாலையில் நடந்து செல்லக்கூடிய நிலை வருமோ அப்பொழுதுதான் பாதுகாப்பு என்பது முழுமை பெறும்.
எனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். கண்காணிப்பு கேமராக்கள் போன்றவை தனிமனிதனின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்கிறது. இது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளை காலத்திற்கு ஏற்றார் போல் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற முன்னெடுக்கப்படும் முன் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"இவ்வாறு கூறினார்.
கருத்துக்கள்