பரமக்குடி பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குடிநீர் வராமல் பொதுமக்கள் அவதி!
பரமக்குடி நகராட்சி 36-வது வார்டு முனியாண்டிபுரம், பள்ளிவாசல் தெருவில் பல மாதங்களாக குடிநீர் வராமல் பொதுமக்கள் அவதி. பல முறை நகராட்சி கூட்டத்தில் முறையிட்டும் கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்.
தற்போதைய தமிழ்நாடு அரசு பொதுமக்களின் அன்றாட அடிப்படை தேவைகளான குடிநீர், மருத்துவம், கல்வி போன்றவற்றில் முழு கவனம் செலுத்தி யாரும் இதனால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் முழுகவனம் செலுத்தி வருவதை நாம் கண் கூடாக காண முடியும்.மேலும், நகர்ப்புற மக்களின் அடிப்படை கோரிக்கைகள் என்ன தேவையென்பதை அறிந்து கொள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் மாதந்தோறும் கூட்டம் நடத்தி அந்தந்த வார்டு உறுப்பினர்கள் கூறும் குறைகளை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் நிறைவேற்றி வருவது நடைமுறை பழக்கமாக இருந்து வருகிறது.
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தின் இதய பகுதியாக விளங்குவது பரமக்குடி நகரமாகும். பரமக்குடி நகரம் 36 -வார்டுகளை கொண்ட பெரிய நகராட்சி பகுதியாகும்.இந்நிலையில், 36-வது வார்டில் முனியாண்டிபுரம், பள்ளிவாசல் தெருக்களில் பல மாதங்களாக வீடுகளுக்கு உள்ள குடிநீர் பைப்புகளில் குடிநீர் வராமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகள், வயதானவர்கள், உடல் நலம் குன்றியவர்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் வராமல், வண்டிகளில் வரும் குடிநீர் வாங்கி பயன்படுத்தும் போது உடல் நலம் குன்றி பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று வரும் அபாயம் நீடிக்கிறது.
இதனையறிந்த, அப்பகுதி நகராட்சி வார்டு உறுப்பினர் மோகன் மாதந்தோறும் கூட்டப்படும் நகராட்சி கூட்டத்தில் பல மாதங்களாக தனது வார்டில் வீடுகளுக்கு குடிநீர் வரவில்லையென புகார் கூறி பேசி வந்துள்ளார். மேலும், அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர், நகராட்சி தலைவரிடமும் பல முறை நேரில் சென்று முறையிட்டும் " செவிடன் காதில் ஊதிய சங்காக " , எதையுமே கண்டு கொள்ளாமல் அப்பகுதி மக்களின் அன்றாட தேவையான குடிநீர் வரத்தை நிறைவேற்றாமல் வஞ்சிப்பது என்ன காரணம் ? என தெரியவில்லை.இது சம்மந்தமாக அப்பகுதி பொதுமக்கள் ஆக்ரோஷமாகவும் ... கொந்தளிப்புடனும் ... கூறியதாவது :
எங்கள் பகுதியில் கடந்த பல மாதங்களாக வீடுகளுக்கு பைப்புகளில் குடிநீர் வருவதே இல்லை. இது சம்மந்தமாக எங்களது வார்டு உறுப்பினர் மோகன் நகராட்சி நிர்வாகத்தில் பல முறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகத்தினர் செவி சாய்த்ததாக தெரியவில்லை.கோடை காலம் நெருங்கிக் கொண்டே வருவதால் இனிமேலும் காலம் கடத்தாமல் சம்மந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் 36-வது வார்டில் முனியாண்டிபுரம், பள்ளிவாசல் தெரு பகுதி மக்களது அடிப்படை தேவையான காவிரி கூட்டு குடிநீரை வழங்கி எங்களது வாழ்வில் ஒளிபெறச் செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளதோடு, மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு எங்களது அடிப்படை வசதியான குடிநீரை பெற்றுத் தருவதற்கு போர்க்கால நடவடிக்கை எடுத்து எங்களது குறையை போக்குங்கள் என ஆக்ரோஷமாக வலியுறுத்தி கூறினர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்