'அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு ஸ்டாலினுக்கு பயம்': நயினார் நாகேந்திரன் பதிலடி!
அதிமுக - பாஜக கூட்டணி தான் மக்களை சுரண்டிக் கொழிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தனர். அதன்படி, வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்துள்ளது. மேலும், தமிழக பாஜகவின் புதிய தலைவராக, அக்கட்சியின் திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி மீண்டு்ம் அமைந்துள்ளது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. திமுக தவைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூட இக்கூட்டணி குறித்து விமர்சித்திருந்தார். அவரது விமர்சனத்துக்கு பதிலடி அளிக்கும் விதத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும், "நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள். இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான். ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது.
இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை, அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது.என்று நயினார் நாகேந்திரன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்