கருணாநிதி பிறந்த நாள் விழா பேச்சு போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க அழைப்பு
தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ் வளர்ச்சித் துறையின் 2024-2025ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில் "தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படும்" என்று அமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பினைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 அன்று செம்மொழி நாள் விழா முன்னிட்டு மாவட்ட அளவில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 09.05.2025 அன்று தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.
அது போன்று, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 10.05.2025 அன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவுசெய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.
பள்ளிகள்
கட்டுரை: முத்தமிழறிஞர் கலைஞர் எழுத்தில் சமூகநீதி
பேச்சு:
1. கவிஞர் முத்தமிழறிஞர் கலைஞர்
2. மொழியின் நாயகர் முத்தமிழறிஞர்
கல்லூரிகள்
கட்டுரை: முத்தமிழறிஞர் கலைஞரின் கடித இலக்கியம்
பேச்சு:
முத்தமிழறிஞர் கலைஞரின் ஆக்கமும் – செம்மொழித் தாக்கமும்
தலைவர் கலைஞரின் தமிழ் தேசிய உணர்வு
11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாம் பரிசாக ரூ.7000/-, மூன்றாம் பரிசாக ரூ.5000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்