தூத்துக்குடி மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு மனுக்கள் : மாநில ஆணையர் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரியகுமார் விசாரணை மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (24.04.2025), மாண்பமை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரியகுமார் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் வழக்குகள் தொடர்பான விசாரணை மேற்கொண்டார்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நோக்கம், குடிமக்களுக்கு அரசு செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பெற்று, அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தண்மையை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை அதிகரிக்கவும், ஜனநாயகத்தை மக்களுக்காகச் செயல்பட செய்வதாகும்.
பொதுவாக, இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை என்பது, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (RTI)கீழ் ஒரு தகவல் கோரிய மனுவுக்குப்பதில் அளிக்கப்படாத போது, அல்லது திருப்திகரமாக பதில் அளிக்கப்படாதபோது, சம்பந்தப்பட்ட நபருக்கு முதல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து முடித்த பிறகும், திருப்தி அடையாவிட்டால், இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை மாண்பமை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வழிவகுக்கும்.
இதன் நோக்கம், மேல்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவலைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதாகும். மேலும், மாண்பமை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்கள் மாவட்டங்களில் பல்வேறு துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட நிலுவையில் உள்ள இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களை நேரில் சென்று தீர்வு செய்வது என்பது பொதுமக்களாகிய மனுதாரர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் பயனுள்ளதாகவும் காலவிரையமின்றியும் பயணச்செலவு ஏற்படாமலும் தீர்வு காண்பதை பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
மேலும், இந்த விசாரணையின்போது, மனுதாரர்களும் பொதுத் தகவல் அலுவலர்களும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முன்பு நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக நேரடி விசாரணை மேற்கொள்ளும்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தேவையான தகவல்களை சரியான முறையில் மனுதாரருக்கு வழங்கவும், மனுதாரர் என்ன நோக்கத்திற்காக இரண்டாம் மேல்முறையீட்டு மனு ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ளார் என்பதைக் கண்டறிந்து, அந்த மாவட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு மனுதாரர் கோரிக்கை மீது தீர்வு காண்பதற்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இரண்டாம் மேல்முறையீட்டு 110 மனுக்களின் வழக்குகள் தொடர்பான விசாரணை 24.04.2025 மற்றும் 25.04.2025 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் வழக்குகள் தொடர்பான விசாரணையில் 70 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்கள்