advertisement

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சனை - உலகம் முழுவதும் வர்த்தகம் கடும் பாதிப்பு!

ஜூலை 20, 2024 5:18 முற்பகல் |

 

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகம் முழுவதும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முடங்கியுள்ளன. அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன.


அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளராக உள்ளன.‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை மேம்படுத்துவது வழக்கம்.அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய ‘கிரவுட்ஸ்டிரைக்கின்’ ‘பால்கன் சென்சார்’ மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, மைக்ரோசாப்டின் சர்வர் நேற்று திடீரென முடங்கியது.

இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் அஸூர்,ஆபீஸ் 365 சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள், தனிநபர்கள் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் மென்பொருளில் இயங்கும் கணினி, மடிக்கணினிகளில் நீல திரை தோன்றி, ‘கணினிசெயலிழந்துள்ளது’ என்பதை காட்டியது.

இந்த பிரச்சினை காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உட்பட உலகம் முழுவதும் தொழில்நுட்ப சேவைகள் முடங்கின. குறிப்பாக, விமானம், ரயில், வங்கி,பங்கு சந்தை, ஊடக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அலுவலகங்கள் ஸ்தம்பித்துள்ளன. இந்திய பங்குச் சந்தைநிறுவனங்களான 5பைசா, நுவாமா உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. ‘இந்தியாவின் நிதி சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 10 வங்கிகளின் சேவைகளில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு, உடனடியாக சரிசெய்யப்பட்டது’ என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் உலகமே முடங்கியபோதிலும், ரஷ்யா, சீனாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று அந்நாடுகளின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் இந்தியாவில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர், விஸ்தாரா, ஏர் இண்டியா நிறுவனங்களின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இண்டிகோவின் 192 விமான சேவைகள் உட்பட நாடு முழுவதும் நேற்று 200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் அவதியடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் டிஜிட்டல் பலகைகள் செயல்படாததால், விமான வருகை, புறப்பாடு விவரங்கள் பலகையில் எழுதி வைக்கப்பட்டன. போர்டிங் பாஸ், கையெழுத்து பிரதியாக வழங்கப்பட்டது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement