இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு- ரஷ்யாவில் பிரதமர் மோடி பேச்சு
ரஷியாவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாஸ்கோவில் புலம்பெயர்ந்த இந்திய மக்கள் மத்தியில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி,மாஸ்கோவில் இந்திய மக்கள் மத்தியில் பேசியதாவது:“மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, முதல்முறையாக புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடுகிறேன். இன்று, ஜூலை 9, நான் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. 3 மடங்கு வலிமையுடன், 3 மடங்கு அதிக வேகத்தில் பணியாற்றுவேன் என்று சபதம் எடுத்திருந்தேன். இம்முறை இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு.
இந்த முறை ஏழைகளுக்கு மூன்றாவது கட்டமாக 3 கோடி வீடுகள் வழங்கப்படவுள்ளது. 3 கோடி கிராம பெண்களை லட்சாதிபதி ஆக்குவதே அரசின் இலக்கு. இந்தியாவில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சமாக மாற்றுவோம்.
உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலைக் கொண்ட நாடு இந்தியா. 2014-ல் முதல்முறையாக பதவியேற்ற போது இந்தியாவில் 100 ஸ்டார்ட் அப் மட்டுமே இருந்தது, தற்போது லட்சக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன.இன்றைக்கு பல்வேறு காப்புரிமைகளை தாக்கல் செய்தும், ஆய்வுக் கட்டுரைகளை பதிவு செய்தும் சாதனை படைக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது என்றார்.
கருத்துக்கள்