குவைத் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து – 40பேர் உயிரிழப்பு!
குவைத் நாட்டின் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவைத் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆறு மாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் திடீரென தீப்பற்றியது. இதனைத் தொடர்ந்து தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது. இந்தக் கட்டடத்தில் சுமார் 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.கேரளத்தை சேர்ந்த தொழிலதிபர் கேஜி ஆபிரஹாமுக்குச் சொந்தமான கட்டடமென மலையாள பத்திரிகையான மனோராமா தெரிவித்துள்ளது. அதே போல கே.ஜி.ஆபிரஹாமின் என்பிடிசி சூப்பர் மார்கெட் ஊழியர்களும் இந்தக் கட்டடத்தில் தங்கியுள்ளனர்.
இந்த தீவிபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 50 பேர் காயமுற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தடயவியல் நிபுணர்கள் தீயில் எரிந்த பகுதிகளில் தடயங்களை சேகரித்து வருவதாகவும் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சம்பவ இடத்தை பார்வையிட்ட குவைத் துணை பிரதமர் பஹத் யூசுப் அல்- சபா இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கட்டட உடைமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துக்கள்