advertisement

சென்னை- தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா? கனிமொழி கேள்வி

ஏப். 03, 2025 5:06 முற்பகல் |


 
சென்னை- தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா? என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக கனிமொழி எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள்வியில், ‘சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தின் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், தஞ்சாவூா் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்தி, தற்போதுள்ள போ்ல் சிட்டி எக்ஸ்பிரஸில் உள்ள கூட்ட நெரிசலைக் குறைக்கவும், சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் ஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:சென்னை- தூத்துக்குடி பிரிவில் தற்போது வண்டி எண்: 12693/12694 சென்னை எழும்பூா்- தூத்துக்குடி போ்ல் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி சேவையாக இயக்கப்படுகிறது.

தவிர, வந்தே பாரத் ரயில் சேவைகள் உள்ளிட்டட ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது இந்திய ரயில்வேயில் நடந்து வரும் செயல்முறையாகும். இது போக்குவரத்து நியாயப்படுத்தல், செயல்பாட்டு சாத்தியக்கூறு, ஆதர வளங்களின் கிடைக்கும் தன்மை போன்றவற்றுக்கு உள்பட்டதாகும் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement