advertisement

சென்னையில் இரும்பு வியாபாரியை கடித்த ராட்வீலர் நாய்

ஏப். 04, 2025 9:23 முற்பகல் |

 

சென்னை புழல் பகுதியில் மாரியப்பன் என்ற இரும்பு வியாபாரி ராட்வீலர் நாய் கடியால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புழல் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். மார்ச் 31-ம் தேதி இரவு, வழக்கறிஞர் ஒருவர் ராட்வீலர் நாயை வாக்கிங் அழைத்து வந்துள்ளார். அந்த இடம் முட்டு சந்தாக இருந்ததாக கூறப்படுகிறது.

மாரியப்பன் நாயின் உரிமையாளரிடம், "இந்த பகுதி முட்டு சந்தாக உள்ளதே, இங்கு எதற்காக இவ்வளவு பெரிய நாயை, அதுவும் இந்த இரவு நேரத்தில் வாக்கிங் அழைத்து வருகிறீர்கள்...? என்று கேட்டுள்ளார். 
அதற்கு அந்த ராட்வீலர் நாயின் உரிமையாளர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். "நான் சொன்னால் இந்த நாய் உன்னை இப்போது கடிக்கும் பார்க்கிறாயா?" என்று மிரட்டியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ராட்வீலர் நாயை கடிக்க சொல்லி உரிமையாளர் உத்தரவிட்டதாக தெரிகிறது.

உடனே அந்த ராட்வீலர் நாய் மாரியப்பனை மாறி மாறி கடித்துள்ளது. மார்பு, பின்புறம், தொடை போன்ற இடங்களில் கடித்து குதறியுள்ளது. மாரியப்பனின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி ஓடி வந்துள்ளார். நாயின் உரிமையாளரிடம் முறையிட்டபோது, "நீயும் சென்று விடு இல்லை என்றால் உன்னையும் நாயை விட்டு கடிக்க வைப்பேன்" என்று மிரட்டியதாக கூறப்படுகிற

உடனடியாக மாரியப்பனை அவரது மனைவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நாய் கடிக்கான மருந்தும் செலுத்தப்பட்டது.
இதுகுறித்து மாரியப்பன் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வழக்கறிஞர் என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குகிறதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement