தூத்துக்குடியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் : எம்.பி., கனிமொழி வழங்கல்
தூத்துக்குடியில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கனிமொழி கருணாநிதி எம்பி பயனாளிகளுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின்கீழ் செயல்பட்டுவரும் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டங்களில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கான மருத்துவ உபகரணங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 66 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67,18,800 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 93 பயனாளிகளுக்கு ரூ.54,02,670 மதிப்பிலான வரன்முறை பட்டாக்களையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள் அவர்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் தொடர்ந்து நிறைவேற்றி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கக்கூடிய அரசு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளோர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களாக குடியிருப்போர்களின் நீண்டநாள் கோரிக்கையாக நீண்டநாள் கனவாக இருக்கக்கூடிய அந்த பட்டா பெறுவதை இன்று நிஜமாக்கிகொண்டிருக்கிறார்.
மக்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற நோக்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட சுகாதார அலுவலரும் கலந்தாலோசித்து முக்கியமான மருத்துவ உபகரணங்களை தேர்வுசெய்து வாங்கிக் கொடுத்துள்ளார்கள். இந்த மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும், உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக மாவட்டத்தில் உள்ள 180 நலவாழ்வு மையங்களுக்கு கூடுதலாக தானியங்கி பகுப்பாய்வுக் கருவி, நெபுலைசர், இரத்த அழுத்த மானி, மைய விலக்கு சுழற்சிக் கருவி, ஹீமோகுளோபினோ மீட்டர், குளிர்சாதனப் பெட்டி, மருத்துவப் பெட்டி, தள்ளுவண்டி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் கனிமவள நிதியிலிருந்து ரூ.2,00,28,944/- மதிப்பில் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டிலிருந்து ஒரு கால் செயல்படாத நிலையிலிருந்தாலும் வழங்கலாம் என்ற அரசாணைப்படி இன்றைக்கு நம்முடைய மாவட்டத்தில் நிறைய மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகிறார்கள். அதுபோல, தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தில் நத்தம் புறம்போக்கில் 5 வருடங்களுக்கு மேல் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார் என்றார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யாழினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், அரசு அலுவலர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்