advertisement

நெல்லை - கொல்லம் இடையே பகல் நேர நேரடி ரயில்கள் இயக்கப்படுமா?  பயணிகள் சங்கம் கோரிக்கை

ஏப். 18, 2025 3:42 முற்பகல் |

 

தென்காசி வழியாக நெல்லை - கொல்லம் பகல் நேர நேரடி ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நெல்லை - தென்காசி கொல்லம் ரயில் பாதையானது, தமிழ்நாட்டின் எல்லை கிராமமான பகவதி புரத்திலிருந்து தொடங்கி கேரள மாநிலம் புனலூர் வரை பாலங்கள், குகைகள், நீர்வீழ்ச்சிகள், காடுகள் என ரயில் பயணிகள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த 1904ஆம் ஆண்டு மீட்டர்கேஜ் ரயில் பாதையாகத் தொடங்கப்பட்ட நெல்லை - தென்காசி - கொல்லம் ரயில் வழித்தடத்தில் பகல் நேரத்தில் மூன்று ஜோடி பயணிகள் ரயில்கள் என நெல்லை - கொல்லம் இடையே இயங்கி வந்தன. தற்போது, அகல ரயில் பாதையாக மாற்றுதல், மின் மயமாக்கல் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இயக்கப்படவில்லை.

செங்கோட்டை - புனலூர் இடையே மலைப்பாதையாக இருப்பதால் அனைத்து ரயில்களிலும் ரயிலின் பின்புறமும் பேங்கர்ஸ் எனப்படும் ரயில் என்ஜின்கள் இணைத்து இயக்கப்படுகின்றன. இதனால், தொழில்நுட்ப ரீதியாக 20 நிமிடங்கள் அதிகமாவதோடு கூடுதலாக இரண்டு ரயில் ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். இதனால், மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கி வந்த நெல்லை கொல்லம் ரயில்களை மீண்டும் இயக்குவதற்கு இந்தத் தொழில் நுட்ப இடையூறு இருப்பதால் இதற்கு மாற்று ஏற்பாடாக மெமு ரயில்கள் ஒன்றே தீர்வாக அமையும்.மெமு ரயில்களில் மோட்டார் மேன் என அழைக்கப்படக்கூடிய ரயில் ஓட்டுநர் ஒருவர் ரயிலின் முன்புற பெட்டியிலும் கார்டு பின்புற பெட்டியிலும் இருப்பார். மேலும் இந்த 12 பெட்டிகள் கொண்ட மெமு ரயிலில் உள்புறமாக அனைத்து பெட்டிகளுக்கும் சென்றுவர இயலும் என்பதால் பயணிகளுக்கும் சௌகரியமாக இருக்கும். எனவே மெமு ரயில்களுக்கான சோதனை ஓட்டம் நடத்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு நடத்தப்படும் பட்சத்தில் நெல்லை - கொல்லம் இடையே தென்காசி வழியாக நேரடி பகல் நேர ரயில்கள் இயக்க முடியும். மேலும், இதன் மூலம் பயண நேரம் குறைவதோடு ரயில்வேக்கு இயக்குதல் மற்றும் பராமரிப்பு செலவும் கணிசமாக குறையும். கொல்லத்தில் மெமு ரயில்களைப் பராமரிக்க பணிமனை இருப்பதால் 12 பெட்டிகள் கொண்ட மூன்று மெத்து ரயில் தொடர்களை கொல்லம் பணிமனைக்கு ஒதுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement