நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனு- சித்தராமையா பதிலளிக்க உத்தரவு
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கடந்த 2016-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் இதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா லோக் ஆயுக்தா போலீஸில் புகார் அளித்தார்.இதுகுறித்து விசாரித்த லோக் ஆயுக்தா போலீஸார் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர்கள் மல்லிகார்ஜூன சுவாமி, தேவராஜ் உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தனர். இதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி சந்தோஷ் கஜனன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘’லோக் ஆயுக்தா போலீஸார் இந்த வழக்கு குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகே சித்தராமையா, பார்வதி உள்ளிட்டோர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளிக்க முடியும். லோக் ஆயுக்தா போலீஸாரின் அறிக்கையை எதிர்த்து அமலாக்கத்துறை வழக்கு தொடரலாம்’’என உத்தரவிட்டார்.இந்நிலையில் சமூக ஆர்வலர் ஸ்நேகமயி பிரசன்னா இவ்வழக்கை லோக் ஆயுக்தா விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், அந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற மே 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
கருத்துக்கள்