திரு உத்தரகோசமங்கை கும்பாபிஷேகம் - சிறப்பு பேருந்துகள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
திரு உத்தரகோசமங்கையில் வரும் 04 -ந் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு 03, 04-ந் தேதிகளில் பரமக்குடி, ராமநாதபுரத்தில் இருந்து திருவிழா சிறப்பு பேருந்துகளை இரவு, பகலாக இயக்க வேண்டுமென அரசு போக்குவரத்து கழகத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவாசகப் பாடல் பெற்ற திருத்தலங்களில் மூன்றாவதாக இடம் பெற்ற திருத்தலம் ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள திரு உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவில் ஆகும்.மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் என்னும் பிரபலமான கோவிலாக திகழ்கிறது.
இக்கோவிலில் ஐந்தரை அடி உயரம் முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பில் காட்சியளிப்பதும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று நடராஜரை கெளரவிக்கும் வகையில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனம் கலையப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிவதும், உலகின் பழமையான சிவன் ஆலயம் என்ற பெருமையும் பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம்.
தமிழ்நாடு அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் இத்திருத்தலத்தில் வரும் 04 - ந்தேதி (வெள்ளி) காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரைக்குள் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்புடன் நடைபெறவுள்ளது.
மேலும், மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு மரகத நடராஜருக்கு ஆண்டுக்கு ஒரு முறை 1 நாள் மட்டும் கலையப்படும் சந்தனகாப்பு சிறப்பு அம்சமாக 01-ந் தேதி (செவ்வாய்) முதல் 04 - ந் தேதி (வெள்ளி) வரை சந்தனம் கலையப்பட்டு மரகதலிங்கம் நடராஜர் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
மரகதலிங்க நடராஜரை கண்டு அருள் பெற்றிடவும், பழம்பெரும் சிவன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகத்தை கண்டு அருள் பெற்றிடும் வகையில் பரமக்குடி, ராமநாதபுரம், மதுரை, இளையான்குடி, சத்திரக்குடி உள்பட தென் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கான பக்தர்கள் பெருந் திரளாக திரண்டு வந்து தரிசனம் செய்ய இருப்பதால்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தினர் வரும் 03, 04 -ந் தேதிகளில் (வியாழன், வெள்ளி) 2 நாட்களிலும் பரமக்குடி, ராமநாதபுரம் பஸ் நிலையங்களில் இருந்து இரவு - பகலாக கோவிலுக்கு திருவிழா சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டுமென பக்தர்கள் , பொதுமக்கள் கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்