'எம்புரான்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்; வருத்தம் தெரிவித்த மோகன்லால்!
குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகளுக்கு இந்துத்துவா அமைப்புகள் சார்பில் எதிர்ப்புகள் களம்பிய நிலையில், எம்புரான் படத்தில் 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு வெளியான 'லூசிஃபர்' திரைப்படத்தின் 2ம் பாகமான எம்புரான் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்புரான் படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பாபா பஜ்ரங்கி என பெயரிடப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. பஜ்ரங்கி என்பவருக்கு 2002 குஜராத் கலவரத்தில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்துக்களுக்கு எதிராக குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கேரளா பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எம்புரான் படத்தில் படக்குழு குஜராத் கலவரம் தொடர்பான 3 நிமிட நீண்ட காட்சியை நீக்கியுள்ளது. மேலும் நடிகர் மோகன்லால் தனது பேஸ்புக் சமூக வலைதள பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், “ஒரு கலைஞனாக எனது எந்த ஒரு படமும், எந்த ஒரு அரசியல் இயக்கத்தையும், மதத்தினரையும் புண்படுத்தக் கூடாது. எம்புரான் திரைப்படத்தால் என்னை நேசிப்பவர்களுக்கு துயரம் ஏற்பட்டிருந்தால் நானும், படக்குழுவினரும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் எம்புரான் திரைப்படம் பார்த்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வலதுசாரிகளால் உருவாக்கப்பட்ட அழுத்தத்தால், படத்தின் காட்சிகள் நீக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்