advertisement

இளம் வயது திருமணங்களை தடுக்க உறுதிமொழி எடுக்க வேண்டும் - தூத்துக்குடி கலெக்டர் பேச்சு

நவ. 28, 2024 4:30 முற்பகல் |

இளம் வயது திருமணங்களை முற்றிலும் தடுப்பதற்கான உறுதிமொழியினை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட  கலெக்டர் இளம்பகவத், கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம், சிவகளை ஊராட்சியில் நேற்று (27.11.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 74 பயனாளிகளுக்கு ரூ.53.02 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி மாவட்ட  கலெக்டர் இளம்பகவத்  வழங்கி அதன் பின்னர் பேசும் போது தெரிவித்ததாவது:-

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றையதினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் 74 பயனாளிகளுக்கு ரூ.53.02 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.இதுபோன்ற அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு சென்று சேர வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இந்த மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

18 வயதிற்கு குறைவான வயதில் எந்த பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க கூடாது.  சில இடங்களில் அந்த மாதிரியான பழக்கங்கள் இருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும். 18 வயதுக்கு குறைவான வயதில் எந்தவொரு பெண் குழந்தைக்கும் திருமணம் செய்து வைத்தலை ஊக்குவிக்கக் கூடாது. குழந்தைத் திருமணச் சட்டப்படி அது குற்றமாகும்.  சிறுவயதில் திருமணம் செய்வது என்பது அந்த குழந்தைக்கு உகந்ததாக இருக்காது. உடலளவிலும் மனதளவிலும் சிக்கல் ஏற்படும். ஆகையால் இளம் வயது திருமணங்களை முற்றிலும் தடுப்பதற்கான உறுதிமொழியினை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அரசுத்துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உங்களுக்கு எடுத்துக்கூறி இருப்பார்கள். 
 
மேலும், நமது பகுதியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அங்கன்வாடி மையத்தினுடைய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒவ்வொரு குழந்தையையும் ஊட்டச்சத்து மிகுந்த குழந்தையாக வளர்வதை உறுதி செய்ய வேண்டும். எந்தக் குழந்தையும் குறைவான வளர்ச்சியோ அல்லது எடையோ இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்கும் குழந்தைகளை முழுமையாக கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வயதுக்கேற்ற எடையினையும், வயதுக்கேற்ற வளர்ச்சியையும் அடைவதற்கான முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என இந்த நேரத்தில் உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் தி  ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்  விக்னேஷ்வரன்,  வட்டார சுகாதார அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement