தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு - அகற்ற கோரி அமைச்சருக்கு,இந்து முன்னணி புகார்
தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் உடனுறை திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலங்கள், கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி சார்பில் அறநிலையத்துறை அமைச்சருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில்,தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் உடனுறைகு பாத்தியப்பட்ட நிலங்கள் சுமார் 76 ஏக்கருக்கு மேல் உள்ளது. இந்நிலங்கள் தனிநபருக்கு குத்தகைக்கு விடப்பட்டதாகவும், நிலத்தின் வகைபாடு மாற்றம் செய்யாமல் சட்டத்திற்கு முரணாகவும், தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி , தமிழ்செல்வி மற்றும் இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலக அதிகாரிகளையும் தகுந்த விசாரணை செய்து இதில்,முறைகேடு செய்வதற்கு பணமாக ஆதாயம் எதுவும் பெறப்பட்டுள்ளதா? என்று தகுந்த விசாரணை தங்களால் செய்ய வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 77, 78-ன் கீழ்; ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சட்டத்தில் மட்டும் தான் உள்ளது. ஆனால சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் மேற்கண்ட இரு சட்டப்பிரிவுகளுக்கும் எதிராக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தன்னுடைய சுயஇலாபத்திற்காக இந்து சமய அறநிலையத்தறையையே விற்பனை செய்ய கூட தயங்க மாட்டார். அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலின் உள்வாடகை, உள்குத்தகை விடப்பட்ட கடைகளில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 77, 78-ன் கீழ ; அப்பறப்படுத்தாமல் ஆக்கிரமிப்பாளர்களிடம் தகுந்த ஆதாயம் பெற்றுக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது போல் ஆக்கிரமிப்பாளருக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். திருக்கோவிலின் வாசலில் உள்ள கடைகளை உள்குத்தகை, உள்வாடகை எடுத்துள்ளனர்.
குற்றவாளியிடமே ஆதாயம் பெற்றுக்கொண்டால் ; எவ்வாறு குற்றவாளிக்கு எதிராக நீதியை நிலைநாட் டுவார். அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலின் வாசலில் காம்பவுண்ட் சுவர் கட்டாமல் அது தரமற்றநிலையில் உள்ளது என்று சான்றிதழ் பெற்றும் அந்த கட்டிடத்தில் உள்வாடகைக்கு குடியிருப்பவர்களை அப்புறப்படுத்துவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறார். நீதிமன்றத்திலும் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த கூடாது என இணை ஆணையர் அன்புமணி க்கு நீதிமன்றத்தால் உத்திரவு பிறப்பிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உள் குத்தகைக்கு இருப்பவர்களை உடனடியாக அப்புறப்படுத்தாமல் காலம் தாழ்த்தும் ஆணையர் மீது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகிய தாங்கள் தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து தூத்துக்குடி சிவன் கோவிலின் சுற்று சுவருடன் கட்டப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தி திருக்கோவிலுக்கு பாதுகாப்பாக சுற்றுச்சுவர் கட்டப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் சென்னை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக நீதிபேராணை வழக்கு தொடுக்கப்படும் என்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் திருக்கோவில் நிலத்தில் குடியிருப்பவர்கள் சுமார் ரூ.80 இலட்சத்திற்கு மேல் வாடகை பாக்கி உள்ளதையும் வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்