வக்ஃப் சட்டத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் அடைப்புப் போராட்டம்
வக்ஃப் சட்டத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததால் அந்தப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலப்பாளையம் நகரில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. இதனால் மேலப்பாளையம் பஜார் மற்றும் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடையடைப்பு போராட்டம் காரணமாக மேலப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளில் காவல்துறை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரானது இல்லை என கூறினார். வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக 12 மணி நேரம் விவாதத்திற்கு பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.க்கள் மற்றும் எதிராக 232 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி நள்ளிரவு வக்ஃப் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதே போல், மாநிலங்களவையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கருத்துக்கள்