ஆந்திராவை கலக்கும் ‘மூங்கில் பிரியாணி’
ஆந்திர மாநிலத்தின் சிறப்பு உணவு வகைகளைப் பட்டியலிட்டால் முன்பெல்லாம் ஹைதரபாத் பிரியாணி முன்வரிசையில் நிற்கும். இப்போது ஹைதரபாத் தெலங்கானாவுக்குள் சென்றுவிட, ஆந்திராவுக்கு என இருந்த உணவுத் தனித்துவம் கொஞ்சம் குறைந்துவிட்டதாகப் பலரும் நினைக்கலாம். ஆனால், ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்குப் பள்ளத்தாக்கில் தனித்துவமாகத் தயாரிக்கப்படும் ‘மூங்கில் பிரியாணி’ இப்போதும் ஆந்திராவுக்கான சிறப்பு உணவுதான்!
தற்போது அனைத்துப் பகுதிகளிலும் மூங்கில் பிரியாணியைச் சுவைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் அரக்குப் பள்ளத்தாக்கில் வசிக்கும் பழங்குடி மக்களால் சமைக்கப்படும் மூங்கில் பிரியாணியின் தயாரிப்பு முறையும் சுவையும் தனித்துவமானவை. காடுகளில் கிடைக்கும் மூங்கில்களின் துணையுடன் பாரம்பரிய மசாலா கலவை சேர்த்து அங்கு பிரியாணி சமைக்கப்படுகிறது. மூங்கில் பிரியாணியைச் சுவைப்பதற்கு முன்பு, அதைத் தயாரிக்கும் நயத்தை அருகிலிருந்து கவனித்தால், மூங்கில் பிரியாணிக்கு அடிமையாகிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.மூங்கில் பிரியாணியைச் சுவைக்க நீங்கள் பயணப்பட வேண்டியது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள அரக்குப் பள்ளத்தாக்குக்கு! கிழக்கு மலைத்தொடரின் சூழல் பன்மயத்தை உணர்ந்துகொண்டே மூங்கில் பிரியாணியையும் சுவைக்கலாம். அங்கிருக்கும் பழங்குடியினர் பல்வேறு இடங்களில் சிறிய கூரை அமைப்பு கொண்ட கடைகளில் மூங்கில் பிரியாணி தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். மூங்கில் பிரியாணியைச் சுவைப்பதற்காகவே பல்வேறு சுற்றுலாப் பயணிகள் அரக்குப் பள்ளத்தாக்கை நோக்கிப் படையெடுக்கிறார்கள்.
கருத்துக்கள்