நாமக்கல் - மசாஜ் சென்டரில் நுழைந்த போலீ போலீசார் ரூ. 40 ஆயிரம், நகை, மொபைல் பறிப்பால் பரபரப்பு
நாமக்கல் மசாஜ் சென்டரில் 7 பேர் கொண்ட மர்ம நபர்கள் போலீசார் எனக்கூறி, அங்கிருந்த பெண் பணியாளர்களிடம் ரூ. 40 ஆயிரம் ரொக்கம், 3 மொபைல் போன், ஒன்றரை பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இச்சம்பவத்தால் நாமக்கல் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல், திருச்சி ரோட்டில் உள்ள தனியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில், சேலம் மாவட்டம், மல்லூரைச் சேர்ந்த, இளங்கோவன் என்பவர் மசாஜ் சென்டர், அழகு நிலையம், ஆயுர்வேத சிகிச்சை மையம் (ஸ்பா) நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த மையத்திற்கு நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு வந்த, 7 பேர் கொண்ட மர்ம கும்பல், தங்களை போலீசார் எனக் கூறி, தாங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என உள்ளே புகுந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக, அந்த மர்ம நபர்கள், அங்கு இருந்த பெண் பணியாளர்களை மிரட்டி, ஒரே அறையில் அடைத்து வைத்து, அவர்களிடமிருந்து, கம்மல், செயின் உள்ளிட்ட ஒன்றரை பவுன் தங்க நகை, மசாஜ் சென்டரில் வைத்திருந்த ரூ. 40,000 ரொக்கம் மற்றும் 3 மொபைல் போன்களை பறித்துக்கொண்டனர். மேலும், ஸ்பா சென்டரில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுக் காட்சிகள் கொண்ட ஹார்ட் டிஸ்க்கையும் திருடிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்னர்.
Also Read - நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
தகவல் கிடைத்ததும், நாமக்கல் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து, உரிமையாளர் இளங்கோவன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் நகரில் பட்டப்பகலில், மசாஜ் சென்டர் பணியாளர்களை தனி அறையில் அடைத்து வைத்து, நகை, செல்போன் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துக்கள்