நித்யானந்தா உயிரோடு தான் இருக்கிறார்.." - கைலாசா விளக்கம்!
நித்யானந்தா உயிரோடு உள்ளார் என கைலாசா விளக்கம் அளித்துள்ளது. மார்ச் 30 உகாதி விழாவில் அவர் நேரலையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளில் தேடப்படும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாயமானார். அவர், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற மற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாசா நாடு என பெயரிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் கைலாசா நாட்டுக்கு என தனியாக கொடி, பாஸ்போர்ட், தனி நாணயங்கள் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்து அதிரடி காட்டினார் நித்யானந்தா.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சுயநினைவு இல்லாமல் நித்யானந்தா இருப்பதாகவும், அவர் மரணமடைந்து விட்டார் எனவும் பலவிதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவந்தன. ஆனால் அதன் பிறகு சில நாட்களிலேயே மீண்டும் ஆன்லைனில் தோன்றினார் நித்யானந்தா. அண்மையில் பொலிவியா நாட்டில், நில ஒப்பந்த விவகாரத்தில் அந்நாட்டு அரசு மோசடி குற்றச்சாட்டு சுமத்தியதுடன் நித்யானந்தாவின் பல பிரதிநிதிகளை நாட்டை விட்டும் வெளியேற்றியது
இப்படியாக கைலாசா குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், உடல் நலக்குறைவால் நித்யானந்தா மரணமடைந்ததாக தகவல் உலா வந்தது. இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் செய்து சமாதி அடைந்து விட்டதாக நித்யானந்தாவின் உறவினர் என கூறப்படும் சுந்தரேஸ்வரன், வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து முகநூலில் விளக்கம் அளித்துள்ள கைலாசா, நித்யானந்தா ஆரோக்கியமாக உள்ளதாகவும் மார்ச் 30ஆம் தேதி நடந்த உகாதி விழாவில் அவர் நேரலையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துக்கள்