வளர்ச்சிக்கான கூட்டணியாக இருக்கும்; டிரம்ப் சந்திப்பு குறித்து பிரதமர் உரை
MAGA & MIGA இணையும் போது, அது உலகளாவிய வளர்ச்சிக்கான ஒரு மாபெரும் கூட்டணியாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோரின் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக - பாதுகாப்பு துறைகளில் புத்துணர்ச்சியை அளித்துள்ளது. 2030க்குள் இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்த சந்திப்பின் வாயிலாக அமெரிக்கா, இந்தியா இடையிலான வலுவான வணிக உறவை மேம்படுத்த மட்டும் அல்லாது, எரிசக்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகிய துறைகளிலும் கூட்டாண்மை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
"அமெரிக்க மக்கள் அதிபர் டிரம்ப் அறிவித்த 'MAGA - Make America Great Again' என்ற லட்சியத்தை நன்கு அறிவார்கள். இந்திய மக்கள் 'விக்சித் பாரத் 2047' என்ற பாதையில் வேகமாக முன்னேறி வருகின்றனர். அதேபோல், இந்தியாவின் வளர்ச்சி முயற்சிகளை 'MIGA - Make India Great Again' என்று கூறலாம். MAGA & MIGA இணையும் போது, அது உலகளாவிய வளர்ச்சிக்கான ஒரு மாபெரும் கூட்டணியாக மாறும்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு: ராணுவ உபகரணங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம், இணைந்த தயாரிப்பு, கூட்டு மேம்பாடு போன்றவைகளில் இந்தியா-அமெரிக்கா உறவு வலுப்படுத்தப்படும்.புதிய தொழில்நுட்பங்களை இணைக்கவும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இருநாடுகளும் இணைந்து செயல்படும் இந்த சந்திப்பு வாயிலாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவிற்குள் மோடி அடியெடுத்து வைத்தவுடன், டிரம்ப் வெகு காலமாக உங்களை நினைத்து இருந்தோம் என்று அவரை மிகுந்த அனுசரணையுடன் வரவேற்றார். இது, மோடியின் அமெரிக்க பயணத்திற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தன்னை வரவேற்றதற்காக நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், "நண்பர் டொனால்டு டிரம்ப், எனக்கு அளித்த உற்சாகமான வரவேற்புக்கும் அன்பிற்கும் என் இதயம் கனிந்த நன்றி. முதல் பதவிக் காலத்தில் நாம் உறுதியான கூட்டாண்மையை உருவாக்கினோம். இன்று அதே உற்சாகத்துடன் புதிய இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கான தீர்மானங்களை எடுத்துள்ளோம்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா-அமெரிக்கா கூட்டணி உலக பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க உள்ளது.அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், அந்நாட்டுக்கு சென்ற முதல் சில உலகத் தலைவர்களில் நரேந்திர மோடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற மூன்று வாரங்களில் நடந்துள்ள இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் அரசியல், பொருளாதார ரீதியில் வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
கருத்துக்கள்