advertisement

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 42 பேர் பலி

டிச. 25, 2024 10:45 முற்பகல் |

 

கஜகஸ்தானில் 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. சுமார் 60 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. ஆனால் க்ரோஸ்னியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டதாக தெரிகிறது. இதனால் விமானம் அதன் திட்டமிடப்பட்ட இடத்தில் இறங்க முடியாமல் திருப்பிவிடப்பட்டது.

இந்நிலையில் அசர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம், கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் 60 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 42 பயணிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்தில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விமானம் திறந்த வெளியில் கீழே விழுந்து நொறுங்கும் காட்சியும் இதனால் தீ பிழம்பு ஏற்படும் காட்சியும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உயிரிழந்தவர்களில் ரஷ்யா, அசர்பைஜான் மற்றும் கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் முழு விவரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

விமானம் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement