நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம்
திருநெல்வேலியில் இருந்து பாவூர்சத்திரம் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில், தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 13 முதல் மீண்டும் இயக்கம் தொடங்கியது. இந்த ரயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருநெல்வேலி – தென்காசி வழித்தடத்தில் பழனி, பொள்ளாச்சி, கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு நேரடி ரயில் வசதி இல்லாமல் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழில்நுட்ப பழுதுகளால் இந்த ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
புதிய கால அட்டவணைப்படி, (வண்டி எண் 06030) ஏப்ரல் 13 முதல் ஜூன் 1 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில், திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் அடையும்.
அதேபோல (வண்டி எண் 06029) ஏப்ரல் 14 முதல் ஜூன் 2 வரை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில், ஒவ்வொரு திங்கள் கிழமையும் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 7.45 மணிக்கு இந்த ரயில் திருநெல்வேலி வந்தடையும்.
இச்சிறப்பு ரயில், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கடையம், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, கடையநல்லூர், பாவூர்சத்திரம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ஒட்டன்சத்திரம், உடுமலை, பழனி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் மற்றும் கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கருத்துக்கள்