advertisement

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் :சீமான் கோரிக்கை

ஏப். 16, 2025 2:55 முற்பகல் |

 


சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை சட்டமன்றக் கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இன்றுவரை சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்காமல் ஏமாற்றி வருவது நம்பி வாக்களித்த சத்துணவு ஊழியர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும் என்று விமர்சித்தார்.

1982ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு மையங்கள் அமைக்கப்பட்டு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என்று பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்த சீமான், “ தமிழ்நாடு முழுவதும் 65,000 சத்துணவு மையங்களில் 1,95,000 பணியாளர்கள் உள்ளனர். 55 லட்சம் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்” என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த 40 ஆண்டுகளாகப் பணியாற்றியும் சத்துணவு ஊழியர்களின் பணியானது இதுவரை காலமுறை ஊதிய அடிப்படையில் நிலைப்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரும் கொடுமையாகும் என்றும், அதோடு இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! -தமிழக அரசுக்கு மென்பொருள் பயிற்றுனர்கள் கோரிக்கை!
தமிழ்நாடு முழுவதும் தற்போது 60,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ள நிலையில், சத்துணவுப் பணியாளர்களை காலமுறை ஊதியப் பணியாளர்களாக மாற்றி உரிய ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement