தேனியில் பைக்கில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து இளைஞர் மரணம்
தேனியில் இரு சக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு கடித்து 20 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் பழைய ரைஸ் மில் தெருவில் வசித்து வருபவர் மணி. கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஹரிஷ் (20). இவர் கல்லூரியில் படித்து வந்த நிலையில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், ஹரிஷ் நேற்றிரவு (ஏப்ரல் 2) வீட்டில் இருந்து நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கடைக்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு நண்பரின் கையில் ஏறி உள்ளது. அதனால் பதறிப்போன நண்பர் கையை உதறியுள்ளார். அப்போது அந்த பாம்பு பின்னால் அமர்ந்திருந்த ஹரிஷ் கையில் கடித்துள்ளது.
பாம்பு கடித்ததால் சுதாரித்துக் கொண்ட ஹரிஷ் நண்பர், மற்றும் ஹரிஷ் இருவரும் உடனே இருசக்கர வாகனத்திலேயே கம்பம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ஹரிஷுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பாம்பின் விஷம் உடலில் தீவிரமாக பரவி உள்ளதால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு தயாராகிகொண்டிருந்த வேளையில் ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த பாம்பு கடித்ததில் இளைஞர் உயிரிழந்ததாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஹரிஷின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்