advertisement

ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பதவி பறிப்பு!

ஏப். 15, 2025 10:52 முற்பகல் |

 

ஆம்ஸ்டாராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவரது பதவி தற்போது பறிக்கப்பட்டிருக்கிறது 

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த வருடம் ஜூலை 5ம் தேதி அவரது வீட்டருகே ரவுடிகளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் மக்களிடையே பெரும் பேசுபொருளாகியிருந்தது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் மாநில தலைவர் பதவி அதே கட்சியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு வழங்கப்பட்டது.

கட்சியின் பணிகள் நடந்து கொண்டிருக்கும்வேலையில், மாநில தலைவர் ஆனந்த், ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் பலரை கட்சியிலிருந்து நீக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில்தான், கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொள்ள டெல்லியிலிருந்து மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் ராஜாராம் மற்றும் ராம்ஜி கௌதம் இரண்டு பேர் வந்திருந்தனர்.

இவரிடத்தில் நேரடியாகவே சென்று புகார் அளித்த ஆம்ஸ்ட்ராங் , மாநில தலைவர் ஆனந்த் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக புகார் அளித்தார். மேலும், ‘ஆம்ஸ்ட்ராங் நியமித்த பொறுப்பாளர்கள் பாடுபட்டு கட்சியை வளர்த்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, அவ்வளவு எளிதாக பொறுப்புகளை விட்டுத்தருவோமா? மாநில தலைவர் இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்’ என்று தன் தரப்பு நியாயங்களை கோஷங்களோடு எடுத்துரைத்திருந்தார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.

இந்தநிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் தலைமையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொற்கொடி இனி கட்சி பணிகளில் ஈடுபட மாட்டார் என பகுஜன் சமாஜ் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே இனி கவனித்து கொள்வார், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையில் மட்டுமேபொற்கொடி இனிமேல் கவனத்தை செலுத்துவார் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆனந்த் தலைமையில் கட்சிப்பணி தொடரும் என்றும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர்கள் அவர்களது திறமைக்கேற்ற பணிகளில் தொடர்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement