நெல்லை டவுனில் வாலிபர் கொலை-போலீசார் விசாரணை !
நெல்லை டவுன் குருநாதன் கோவில் அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
நெல்லை டவுன் குருநாதன் கோவில் அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது. யாரோ மர்ம நபர்கள் போன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.தகவலின் பேரில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர்கள் கீதா மற்றும் சாந்தராமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குருநாதன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரமாக தேடினர்.
சுமார் 3 மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை.பிறகு தகவல் கொடுத்த மர்ம நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் குருநாதன் கோவில் அருகே முட்புதரில் உடல் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நள்ளிரவில் போலீசார் அந்த உடலை தோண்டி எடுத்தனர். பிறகு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து போனவர் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ( வயது 20) என்பது தெரியவந்தது. கட்டிட தொழிலாளி. இந்த கொலை தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மூன்று இளம் சிறார்கள் உட்பட நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துக்கள்