நாமக்கல் அருகே புகையிலைப் பொருள் கடத்திய 2 பேர் கைது: கார் பறிமுதல்
நாமக்கல் அருகே ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து, புகையிலைப் பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் நல்லிபாளையம் பகுதியில், நல்லிபாளையம் போலீஸ் எஸ்.ஐ. செல்வராசு தலைமையில், எஸ்.எஸ்.ஐ. பாலசுப்ரமணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், காரில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தவர்கள் நல்லிபாளையம் பாரதிதாசன் நகரை சேர்ந்த ரமேஷ் மகன் மவுனீஸ் (22) என்பதும் மற்றொருவர் நாமக்கல் கந்து முத்துசாமி தெருவை சேர்ந்த மளிகை வியாபாரி பிரவீன்குமார் (21) என்பதும் தெரிவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 70,000 ரூபாய் மதிப்புள்ள 132 கிலோ புகையிலைப் பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





கருத்துக்கள்