நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கிறார்கள் - கடைஉரிமையாளர் குற்றசாட்டு!
நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையை தன் மகள் கணவர் வீட்டார் வரதட்சணையாக கேட்பதாக கடை உரிமையாளர் கவிதா சிங் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது அங்குள்ள இருட்டுக்கடை அல்வா தான். இந்த இருட்டுக்கடை உரிமையாளர் மகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தது. கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவரது மகனுடன் திருமணம் ஆனது. இந்நிலையில், தனது மகளை திருமணம் செய்து வரதட்சணை கொடுமை செய்கிறார்கள். இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கிறார்கள் என பெண்ணின் தாயாரும் கடை உரிமையாளருமான கவிதா சிங் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை போலீஸ் கமிஷ்னரிடமும், முதலமைச்சர் கட்டுப்பட்டு துறைக்கும் புகார் அளித்துள்ளோம் என கவிதா சிங் கூறியுள்ளார். கவிதா சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், கல்யாணம் செய்த சில நாளிலேயே இருட்டுக்கடையை எழுதி கொடுத்தே ஆகணும்னு மிரட்டி இருக்காங்க. அவளுடைய மாமனாரும், மகனும் தான் என் மகளை காரில் அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்ருக்காங்க. திரும்பி வரும்போது கடையை எழுதி வாங்கிவிட்டு தான் வர வேண்டும் என மிரட்டி இருக்கிறார்கள்.
என் மகளின் மாமனார், தனக்கு பாஜக சப்போர்ட் இருக்கிறது. எனக்கு இருட்டுக்கடை பிசினெஸை எழுதி கொடுத்தே ஆகனும். எல்லா துறையிலும் தனக்கு ஆள் தெரியும். உணவுத்துறையிலும் ஆள் தெரியும். உங்களை நல்லா வாழவே விடமாட்டேன் என மிரட்டுறாங்க. நான் நேற்றே காவல் ஆணையரிடம் புகார் அளித்துவிட்டேன். நேற்று வரை மிரட்டிவிட்டு இன்று காலை sorry என்ற செய்தி மட்டும் அவங்க அனுப்புறாங்க.
அவங்க எங்க சொந்தக்காரங்க தான் அதனால் தான் கல்யாணம் செய்து வைத்தோம். ஆனால் தற்போது அவர்கள் நிறைய தொந்தரவு செய்கிறார்கள். திருமணத்தின் போது நகை, பணம், புதிய கார் எல்லாம் கொடுத்திருக்கோம். இதற்கு தமிழக முதலமைச்சர் தான் எங்களுக்கு துணை நின்று காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எனது மகளின் வாழ்க்கை பிரச்சனை.” என்று இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங் செய்தியாளர்களிடம் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
கருத்துக்கள்