காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!
வரும் ஆண்டு முதல் அரசின் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் வழங்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவில் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் மற்றும் சாம்பார் சேர்க்கப்படும். இந்த மாற்றம் வரும் 2025-26 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஏற்கெனவே திட்டம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், வரும் கல்வியாண்டு முதல் நகர்ப்புறங்களில் உள்ள இத்தகைய பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும்.
இத்திட்டம் மாணவர்களின் பள்ளி சேர்க்கையை அதிகரித்துள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதுடன் கல்வி ஆர்வத்தை ஊக்குவிப்பதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 2022 செப்டம்பர் மாதம் 15ம் தேதி அன்று முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.
இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், தற்போது 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் 18.5 லட்சம் மாணவர்களும், 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2.23 லட்சம் மாணவர்களும் பயனடைகின்றனர்.
கருத்துக்கள்