கர்நாடகா பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் கைது
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா மாதனகிப்பரக்கா கிராமத்தை சேர்ந்தவள் 14 வயது சிறுமி. இவளது பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பள்ளியில் சிவராஜ் என்பவர் கவுரவ ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மேலும் மாணவிக்கும், சிவராஜ் பாடம் எடுத்து வந்தார்.
இந்தநிலையில் மாணவியுடன், சிவராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி மாணவியை தனிமையில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, அவளது வீட்டுக்கு சிவராஜ் சென்றுள்ளார். அப்போது மாணவியை மிரட்டி சிவராஜ் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நடந்த சம்பவத்தை வெளியே கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.
சிவராஜின் நடவடிக்கையால் பயந்துபோன மாணவி, தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இதுகுறித்து அவர்கள் மாதனகிப்பரக்கா போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவி போலீசாரிடம், சிவராஜ் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து சிவராஜை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தினர். மேலும் அவரிடம் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்