த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு-சேலம் ராஜூக்கு இயக்குநர் சேரன் கண்டனம்
நடிகை த்ரிஷா குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்பி வரும் அதிமுக பிரமுகர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.கே.ராஜூ. இவர் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது ஆதரவாளரான சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த நிலையில் , செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.ராஜூ, கூவத்தூர் சம்பவம் குறித்து சில கருத்துகளை பகிர்ந்தார். இது திரைத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு மது மற்றும் பெண்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்து கொடுத்ததாகவும் ராஜு பேசியிருந்தார். நடிகரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தான், நடிகைகளை அழைத்து வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். குறிப்பாக, நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அவதூறான கருத்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார். ராஜுவின் பேட்டி குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பல்வேறு தரப்பினரின் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆதங்கப்பட்டுள்ள இயக்குநர் சேரன், ‘அதிமுக பிரமுகரின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு உரிய பதில் கொடுப்பதுடன் தகுந்த நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவுடன் நடிகர் சங்க தலைவர் விஷால், நடிகர் கார்த்தி ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.
கருத்துக்கள்