advertisement

மகளிர் உரிமைத்தொகை: ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்

ஏப். 25, 2025 10:44 முற்பகல் |

 

மகளிர் உரிமைத்தொகையில் பெயர் விடுபட்டவர்கள் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதன் முழு விவரம் வருமாறு:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றி ஈஸ்வரன் எம்.எல்.ஏ குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய அந்தத் திட்டத்தின்கீழ், ஒரு கோடியே 14 லட்சம் பேர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த எல்லோருக்கும் அது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னும் இதிலே விடுபட்டிருக்கக்கூடியவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, இந்த அவையிலும் அது எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, இதையெல்லாம் கருத்திலே கொண்டு, மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின்கீழ் பொது மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை உடனடியாக நிறைவேற்றுகிற பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
 
ஆகவே, அந்தப் பணியைப் பொறுத்தவரையில், வருகிற ஜூன் மாதம், 4 ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ் கோரிக்கைகளைக் கேட்கக்கூடிய பணிகளை தொடங்கவிருக்கிறோம். அந்தப் பணி 9 ஆயிரம் இடங்களில் நடைபெறவிருக்கிறது. அப்படி நடைபெறுகிறபோது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால் நிச்சயமாக விரைவில் அவர்களுக்கும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement